தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் நாளையுடன் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் யாரை நியமிக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓய்வு பெற இருக்கும் இறையன்புக்கு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் தன் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில், ‘என் பெயர் இறையன்பு. நான் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் ஓய்வு பெறப் போவதை என் பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டேன். எனது அம்மா, அப்பாவும் தங்கள் பெயரைத் தான் எனக்கு வைத்துள்ளார்கள். உங்களை போலவே பிறரிடம் அன்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று எனது பெற்றோர் அடிக்கடி சொல்வார்கள். நானும் உங்களை போல் இருக்க முயற்சி செய்வேன். நான் பள்ளியில் நன்றாக படிப்பேன். எனது அம்மாவின் மூலம் உங்களில் சில நகைச்சுவை கதைகளை கேட்டுள்ளேன்.
நானும், எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு மழை காலங்களில் மிகவும் குண்டும் குழியுமாக மாறி வருகிறது. அதனால், நாங்கள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இதில் பலர் வழுக்கி விழும் சூழலும் ஏற்படுகிறது. அதனால் தயவு கூர்ந்து எங்களது தெருவில் சாலை வசதி அமைத்துத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’ என்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அந்த மாணவன் பெயர் பொறிக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை நகலையும் இணைத்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.