தஞ்சையில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி, அறுந்துகிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து வயலிலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், டெல்டா பகுதிகளில் தொடர் மழையும் பொழிந்துவருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தலையாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்ற விவசாயி, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் குத்தகைக்கு நிலம் வாங்கி நெல் சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று (15.10.2021) காலை அவர் வயல் வேலை செய்வதற்காகக் கழனியில் இறங்கிய நிலையில், வயல் சேற்றில் அறுந்துகிடந்த மின்கம்பியைத் தெரியாமல் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கப்பட்ட விவசாயி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாகச் செல்வதாகப் பலமுறை மின்வாரியத்திற்குப் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.