Skip to main content

சாராய ஊறல்களை அழிக்கும் போலீசார்... மீண்டும் மீண்டும் தொழிலை நடத்தும் சாராய வியாபாரிகள்... 

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

kallakurichi district kalvarayan malai


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் ஊறல் போடுவதும் களைக்கட்டி வருகிறது. ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு டாஸ்மாக் சரக்குக் கிடைக்காத நிலையில் கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வியாபாரிகள் கள்ளச்சாராயத்தைக் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
 


அப்படி உற்பத்தியாகும் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் அவ்வப்போது காவல்துறை மூலம் மலைப்பகுதிக்குச் சென்று ரெய்டு நடத்தி காய்ச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்வதும், சாராய ஊறல்களை அழிப்பதும் நடந்து வருகிறது.
 

வாழை மரம் வெட்ட வெட்ட குறுப்பதுபோல் கள்ளச் சாராயத்தை போலீசார் ஒருபக்கம் அழித்துக் கொண்டே போனால், சாராய வியாபாரிகள் மறுபக்கம் ஊறல் போட்டு காய்ச்சி விற்பனைக்கு அனுப்பும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறார்கள். தகரை கல்லா நத்தம் பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா. எஸ்.ஐ.பால முரளி மற்றும் போலீசார் மேற்படி ஊர்களுக்குச் சென்று சாராய ரெய்டு நடத்தினர்கள். அப்போது அங்கு காய்ச்ச தயாராக இருந்த சாராய ஊறல்களையும், விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்காக தயாராக இருந்த காய்ச்சிய சாராயத்தையும் அழித்தனர்.
 


இதேபோன்று கள்ளக்குறிச்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேவதி, எஸ்.ஐ. சக்தி மற்றும் போலீசார் கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள ஒரு ஓடை பகுதியில் கூடாரம் அமைத்து கண்காணித்து வந்தனர். அப்போது மூன்று பேரல்களில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த காய்ச்சுவதற்குத் தயாராக ஊறல் போடப்பட்டிருந்த 5,600 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான எட்டு மூட்டை வெல்லம், சாராய வியாபாரிகள் பயன்படுத்திய இரண்டு டூவீலர்கள், 150 லிட்டர் காய்ச்சிய சாராயம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததோடு இதில் ஈடுபட்டிருந்த செல்வராஜ், ரமேஷ், கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 

கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்ச விடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கடந்த 50 நாட்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் காரணமாக கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் உற்பத்தி பெருக்கெடுத்து உள்ளது. பொதுவாக மலைகளில் மழை பெய்து அருவியாக விழுந்து தண்ணீர் ஆறாகப் பெருகி தரையில் ஓடிவரும் ஆனால் கல்வராயன் மலையில் அவ்வப்போது கள்ளச்சாராயம் உற்பத்தியாகி கீழே ஓடி வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்