தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட இடங்களில், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் தற்பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ‘ஜீ ஸ்கொயர்’ பாலா ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி திமுகவினர், சோதனையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல், கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏக்கு சொந்தமான, ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், கரூர் மாவட்டம், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ச்சியாக திமுகவினரின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.