சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சோமசேகர் தீட்சிதர். இவர் நடராஜர் கோவில் தீட்சிதர்களில் ஒருவர். இவரது 14 வயது மகள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நடராஜர் கோவில் தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, கடலூர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவினர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். அதன் பேரில் திருமணமான சிறுமி, மற்றும் அவரது தந்தையை கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு காவல்துறையினர் கடலூருக்கு அழைத்துச் சென்று சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒத்துக் கொண்டனர். இதையடுத்து இது குறித்து சமூக நலத்துறையின் மகளிர் ஊர் நல அலுவலர் தவமணி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (41), சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் (24), மற்றும் அவரது தந்தை கணபதி தீட்சிதர்(42) ஆகியோரை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், தீட்சிதர்கள் மேலும் ஒரு குழந்தை திருமணத்தை நடத்திவைத்தது அம்பலமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 வயது குழந்தைக்கு 19 வயது தீட்சிதரை திருமணம் செய்துகொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர் சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படியில் பத்ரீசன் எனும் தீட்சிதர், அவரது தந்தை ரத்தினம், மணமகனின் சகோதரர் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜகணேஷ் தீட்சிதர், தாய் தங்கம்மாள் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சூர்யா மற்றும் தங்கம்மாளை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான மற்ற நான்கு பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதேபோல், 10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தீட்சிதர்கள் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை திருமணத்தில் அடுத்தடுத்து தீட்சிதர்கள் சிக்குவதால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.