கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவு கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கொடியேற்ற நிகழ்வில் 50 தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி தேர்த்திருவிழாவும், 28ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. விழாக்களை கோவிலுக்குள்ளே எளிய முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் தலைமையில் நடந்தது. இதில் தேர் மற்றும் தரிசன விழாவில் 150 தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்று விழாவை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ள தீட்சிதர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் முடிவு வெளிவந்த பிறகுதான் திருவிழா நடத்துவது குறித்து பரிசிலனை செய்யமுடியும். இதனைத் தொடர்ந்து ராஜமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இருவர் உட்பட 6 பேர் அடங்கிய குழுவினர் கோவில் வளாகத்தில் தீட்சிதர்களுக்கு கரோனா டெஸ்டுக்கான உமிழ்நீர்ப் பரிசோதனை செய்யப்பட்டது.