சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் விடிய விடியப் பரவலாகக் கனமழை பொழிந்தது. சென்னையில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொழிந்தது. ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், ஐயப்பன் தாங்கல், செம்பரம்பாக்கம் அதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பொழிந்தது.
அதே சமயம் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
மேலும் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் 10 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. பலத்த காற்று வீசியதன் காரணமாகத் துபாயில் இருந்து வந்த விமானம் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டது.