குமரியில் தொடரும் கஞ்சா, பாலியல், கடத்தல் குற்றங்கள் போன்று சூதாட்டமும் அதிகரித்துள்ளது. இதுவரை லாட்ஜ் வீடுகள் என ரகசியமாக நடந்து வந்த சூதாட்டம் கரோனா தொற்றால் லாட்ஜுகள் அடைக்கப்பட்டிருப்பதால், ஆள் நடமாட்டம் இல்லாத தென்னந்தோப்பு, மலையடிவாரங்கள் போன்ற இடங்களில் பகல் இரவு நேரங்களில் பல லட்சங்களை வைத்து நடந்துவருகிறது.
இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு, திருவட்டார் யூனியன் கவுன்சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சகாய ஆண்டனி(46), செட்டிசார் விளை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அவரை ஒரு கும்பல் கம்பியால் தலையில் தாக்கியது. இதில், படுகாயமடைந்தவா் கோமா நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார். இதைக் கண்டித்து, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீஸார், ராஜேஷ்(40), சுனில் நாயகம்(35), வினுகுமார் (38) ஆகிய 3 பேரை நேற்று (20-ஆம் தேதி) கைது செய்தனர். இது குறித்து அவர்கள் போலீசிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது, "வெளி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து ஆட்களை வரவழைத்து சூதாட்டம் நடத்திவந்தோம். கரோனா நேரத்தில், பல ஊா்களில் மறைவான இடங்களில் இருந்து, பல லட்சங்கள் வைத்து சூதாட்டம் நடத்தி வந்தோம்.
இதையெல்லாம் போலீசாருக்கு கவுன்சிலர் சகாய ஆண்டனி போட்டுக் கொடுத்து வந்ததால் போலீசார் நெருக்கடியால் அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டியதாயிற்று. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வருவதை நிறுத்திவிட்டனர். இதனால் சூதாட்டம் நடத்த முடியாமல் பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில் பழி தீர்த்துக் கொள்வதற்காகத் தான் அவரை தாக்கினோம் என்றனா். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சூதாட்டக் கும்பல் தாக்கிய விஷயம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.