இயந்திரத்தால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை, 12 சதவீதமாக குறைத்த மத்திய அரசு, கையால் தயாரிக்கும் தீப்பெட்டிக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இதற்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கோவில்பட்டி, சாத்தூர், எட்டையபுரம், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் அதிக எண்ணிக்கையில் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் கர்நாடாகா, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஒடிஷா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்தம் 7 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்பு வரை தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (14.03.2020) டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இயந்திரத்தால் செய்யப்படும் தீப்பட்டிக்கும், கையால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிக்கும், ஒரே சீராக 12 சதவீத வரி விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவை இயந்திரத்தால் உற்பத்தி செய்யும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் கையால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிக்கு 5 சதவீத வரியை 12 சதவீதமாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த வரியை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தீப்பெட்டிக்கு வழங்கி வந்த 7 சதவீத ஊக்கதொகையை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 1.5 சதவீதமாக குறைத்து வழங்குகிறது. இதை மீண்டும் 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.