Skip to main content

ஏரி கரை உடைந்தது... பயிர்கள் நீரில் மூழ்கின! 

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அருணாச்சல பிள்ளை பாசன ஏரி அமைந்துள்ளது. இவ்வேரியின் நீர் பாசனம் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவ மழை இல்லாததால், ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை. ஆனால் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அருணாச்சலம் பிள்ளை ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


ஏரியில் தண்ணீர் பிடிப்பு அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், ஏரியின் கரைகள் போதிய வலுவில்லாமல் இருந்ததினால் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், அருகிலுள்ள 250 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு இருந்த உளுந்து, கம்பு, நெல், கரும்பு உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் மூழ்குவதும், அடித்து செல்லப்படுவதுமாக உள்ளது.  
 

HEAVY RAIN CUDDALORE LAKE BREAKE DOWN WATER FLOOD AGRICULTURE LAND


இதனால் வயல் வெளிகள் தண்ணீரில் மூழ்குவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் தங்களின் முயற்சியில் அருணாச்சலம் பிள்ளை ஏரியில் ஏற்பட்ட உடைப்பை தென்னை மரங்கள் கொண்டும், மண் மூட்டைகள் கொண்டும் கரை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் சுமார் 20- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்து அளவு தண்ணீரில் நின்று கொண்டும், முட்புதர்கள், விஷ பூச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு அஞ்சாமல் தங்களின் நிலங்களை பாதுகாக்கவும், நீர் ஆதாரம் கொண்ட ஏரியின் தண்ணீரை வெளியே செல்லாமல் இருக்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 
 

பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், ஏரியை தூர் வாராமலும், கரையை பலப்படுத்தாமலும் இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏரியில் உள்ள மரங்களை ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டும் ஊராட்சி நிர்வாகம்,  தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் ஏரியை தூர்வாரமல், கரையை பலப்படுத்தாமல் இருப்பதால், அனைத்து விளைச்சலும் முழுவதும் அழிந்து விட்டதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அருணாச்சல பிள்ளை ஏரி நிரம்பி உள்ள தண்ணீரை கட்டுப்படுத்தி, தங்களின் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தற்போது போராடி வரும் நிலையில், விவசாயிகளை பாதுகாக்க அரசு போர்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு வீணாக செல்லும் தண்ணீரை கட்டுப்படுத்தி, கரை அமைத்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்