![New Income Tax Bill to be tabled today](http://image.nakkheeran.in/cdn/farfuture/bu2syTcsv3ANTFFKx6SSH27gf1Ckt09Vnl-unjS_it0/1739411430/sites/default/files/inline-images/lok-saba-art_3.jpg)
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ஆம் தேதி (31.01.205) தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி (01.02.2025) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், “புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். 63 ஆண்டுக்கால பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று (13.02.2025) தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவைத் தாக்கல் செய்வார் என மத்திய அரசின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி வருமான வரி சட்டத்தை எளிதாக்கும் வகையில் 662 பக்கங்கள் கொண்ட மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வருமான வரி சட்டத்தை எளிதாகப் புரிந்துகொள்ளுதல், சிக்கலின்றி வருமான வரி தாக்கலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.