இருசக்கர வாகனத்தில் சென்றால் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்பதால், அதை முழுமையாக அமல்படுத்த கோரி சென்னை கொரட்டூர் கே.கே.ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, 2015 கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த மூன்றாண்டுகளாக எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், பல்வேறு விளம்பர யுக்திகள் குறித்தும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல 2015ல் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவானது என்பது தொடர்பான ஆண்டுவாரியான மற்றும் மாவட்டவாரியான அறிக்கையும் நீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை படித்த நீதிபதிகள், பள்ளி கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதாது; ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது மோட்டார் வாகன விதிகளிலேயே உள்ள நிலையில் அதை அமல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டினர். காலவ்துறையினர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நிலையில், தேசியக் கொடியுடன் செல்லும் நீதிபதி வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் மதிப்பதில்லை; விதிகளை அமல்படுத்துங்கள் என்று சொன்னால் நீதிமன்றம் கட்டாயபடுத்துவதாக நீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகள் மீதும் திசை திருப்புகின்றனர் என அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜேந்திரன் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.