ரயிலில் தவறிவிழுந்தவரை 30 கிமீ நடந்தே தேடிக்கண்டுபிடித்த நண்பர்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.
தென்காசியைச் சேர்ந்தவர் காக்கும் பெருமாள் (வயது 40). இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் கட்டிட வேலை செய்துவந்தார். இந்நிலையில், விடுமுறைக்காக கடந்த திங்கள்கிழமை இரவு காக்கும் பெருமாள் தனது நண்பர்களுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்குக் கிளம்பியுள்ளார்.
ரயில் செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் பகுதி அருகே வேகமாக சென்றுகொண்டிருந்த போது, ரயில்பெட்டியின் வாசலில் நின்றுகொண்டிருந்த பெருமாள் திடீரென ரயிலுக்கு வெளியே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெருமாளின் நண்பர்கள் அபாய சங்கிலியை இழுத்தும் ரயில் நிற்கவில்லை. இதையடுத்து 75 கிமீ பயணித்த ரயில் விழுப்புரம் ரயில்நிலையத்தில் நின்றபோது, ரயில்வே நிர்வாகிகள், காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவலளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேருந்து மூலம் மேல்மருவத்தூர் வந்தடைந்த அம்மூவரும், ரயில் தண்டவாளத்தில் பெருமாளை தேடியபடியே நடந்து சென்றுள்ளனர். அவர்கள் காஞ்சிபுரம் வந்தடைந்தபோது, காவல்துறையினரும் அவர்களுடன் இணைந்து தேடத் தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கிமீ தூரம் நடந்த அவர்கள், தண்டவாளத்தின் ஓரத்தில் படுகாயங்களுடன் கிடந்த பெருமாளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது பெருமாள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தனது நண்பர் ரயிலில் இருந்து தவறிவிழுந்து, அவரை மீட்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருந்தும், விட்டுக்கொடுக்காமல் தேடி அவரை உயிருடன் மீட்ட நண்பர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளனர்.