கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், அதேபோல் தமிழகம், புதுச்சேரியில் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் சுசீந்திரம், ஆஸ்ரமம், கொட்டாரம் மயிலாடி, தோவாளை, திட்டுவிளை உள்ளிட்ட பகுதிகளிலும், புலியூர்குறிச்சி, தக்களை, அழகிய மண்டபம், திங்கள்சந்தை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழையானது பொழிந்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமாரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தர பிறப்பித்துள்ளார்.