கடலூரில் புதுச்சேரி ரவுடி 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணபதி, டெல்டா பிரிவு உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் நேற்று கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்மியம்பேட்டை சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 2 பேரை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 2 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 1 கிலோ கஞ்சா மற்றும் கத்தி, இரும்பு கம்பி ஆகிய ஆயுதங்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை, சாமி முதலியார் வீதியை சேர்ந்த கருப்பண்ணசாமி மகன் பென்னரசன்(26), புதுச்சேரி மாநிலம் வாண்ராபேட், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த எல்லப்பன் மகன் விஸ்டம்(33) என்றுதெரியவந்தது.
இவர்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ரவுடிகள் என்று தெரியவந்தது. இதனையெடுத்து போலீஸார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.