திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிதிட்டங்களுக்கு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்.
ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும் வடபருத்தியூர் பச்சாபாளையம் முதல் தைலிபாளையம் இணைப்புச் சாலைவரை ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி பூமிபூஜை போட்டார். அதைத் தொடர்ந்து சீக்கமாநாயக்கன்பட்டி இருக்கும் கப்பல்பட்டி ஊராட்சி மன்றம் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதுபோல் வாகரையில் துர்க்கையம்மன் வீடு முதல் இளங்கோ வீடுவரை உள்ள 10 சிமெண்ட் காங்கிரட் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். அப்பிபாளையம், வேலம்பட்டி, கூத்தம்பட்டி ரோடு முதல் பருத்தியூர்வரை புதிய சாலை அமைப்பதற்கான திட்டப்பணிகளையும் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அமைச்சர் சக்கரபாணி, தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்படும் பிரச்சார வேனில் ஏறி மக்களுக்கு திட்டப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில் வடபருத்தியூர் பகுதியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “முதல்வர் ஸ்டாலின், நமது தொதிக்கு நிறைய திட்டங்களை ஒதுக்கி இருக்கிறார். நமது பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால், விவசாயிகளின் காய்கறிகளை சேமித்து வைப்பதற்காக ரூ.5 கோடியில் குளிர்சாதனக் கிட்டங்கை உருவாக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி கொடுத்திருக்கிறார். அந்தப் பணி கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. அதுபோல் பரப்பலாறு அணை தூர்வார அனுமதி கொடுத்திருக்கிறார். கொத்தையத்தில் உள்ள நல்லதேங்கா அணை கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார். ரூ.7 கோடியில் பாலம் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார்” என்று கூறினார். இதில் மாவட்டம், ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.