சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு இன்று ஆலோசனை நடத்தினார். 9 கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், 6 கட்சி பிரதிநிதிகளே பங்கேற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், வக்கீல் மனோஜ் பாண்டியன், தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பிரிவு இரா. கிரிராஜன், நீலகண்டன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், தனிகாசலம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுகநயினார், ராஜசேகரன், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், பாலசுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாரதிதாசன், கே.எஸ். மோகன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி மற்றும் அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, செப்டம்பர் 1ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும். சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர். வாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.