காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்ததாக வீடியோவில் வாக்குமூலம் வெளியிட்டுவிட்டு, நிதிநிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (50). திமுக பிரமுகர். அந்தப் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி மாலை, வீட்டில் இருந்த பிரேம்குமார், வாயில் நுரை தள்ளிய நிலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி மே 15ம் தேதி (புதன்கிழமை) காலை அவர் இறந்தார். இந்நிலையில், தான் ஏன் தற்கொலை செய்து கொண்டேன் என்பதை விளக்கி பிரேம்குமார் தன்னுடைய செல்போனில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.
ஆத்தூர் காவல்துறையில் தன் மீது ஜாதி வன்கொடுமை பிரிவின் கீழ் போலியாக வழக்குப்பதிவு செய்ததால்தான் தற்கொலை செய்து கொண்டதாக அந்த வீடியோவில் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரேம்குமாரின் உறவினர்கள் கூறுகையில், ''பிரேம்குமார், அவருடைய தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஆத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் பணம் வாங்கியுள்ளார். 2 மாதத்திற்கு முன்பு, பிரேம்குமார் அதிக வட்டி கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக ராஜ்குமார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரையும் காவல்துறையினர் நேரில் அழைத்துப்பேசி சமாதானம் செய்து வைத்தனர்.
கடந்த மாதம் ராஜ்குமார், திடீரென்று பிரேம்குமாரின் தம்பி செந்தில்குமாரின் வீட்டின் முன்பு, தீக்குளிக்க முயன்றார். அப்போதும் இன்ஸ்பெக்டர் கேசவன் இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ராஜ்குமாரிடம் வாங்கிய ஆவணங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் பணத்தைத் திரும்பக் கேட்கக்கூடாது என்றும் பிரேம்குமாரிடம் கூறினார்.
இதற்கு பிரேம்குமார் மறுத்து விட்டார். இதனால் அவர் மீதும், செந்தில்குமார் மீதும் காவல்துறையினர் ஜாதி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே மனம் உடைந்த பிரேம்குமார் தற்கொலை செய்துள்ளார். அவருடைய தற்கொலைக்கு காவல்துறையினரே காரணம்,'' என்றனர்.
பிரேம்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ராஜ்குமாரின் பின்னணி குறித்தும், பல்வேறு கட்சி நிர்வாகிகள் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதையும், தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ள அனைவரிடமும் காவல்துறையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பிரேம்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய தம்பி செந்தில்குமார் ஆத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்தார்.