குடியரசு தின விழாவை காண சென்னை மெரினா கடற்கரை வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (25/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு ஆளுநர் ஜனவரி 26- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர தினப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.
கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடைப் போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவைக் காண நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி/ வானொலியில் கண்டு கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.