அண்மையில் சென்னையில் பாதாள அறையில் குடோன் அமைத்து குட்கா மற்றும் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கும்பல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிககள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி சென்னை அடையாறில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்த மதுரையை சேர்ந்த சிங்கராஜ் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவனிடம் விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக தயாரித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் விற்பனை செய்வதாக சிங்கராஜ் வாக்குமூலம் அளித்துள்ளான். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை மதுரவாயிலில் வசிக்கும் அவர்களது கூட்டாளியான செல்வம், துரை, பாண்டி, வரதராஜ் ஆகியோரையும் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பெரியலட்சுமி, சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த சுப்பிரமணி அவரது மகன் சூர்யா ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலுக்கு சென்னையில் மட்டும் 1400 வாடிக்கையாளர் இருப்பதாகவும், இந்த வாடிக்கையாளர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவியவந்துள்ளது. அதேபோல் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை 50 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் விற்ப்பதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.