கரோனா இரண்டாவது அலை தணிந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் கரோனா பாதிப்பில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே, ரெம்டெசிவிர் மருந்தும், தடுப்பூசிகளும், ஆக்சிஜனும் ஒதுக்கப்படுகின்றன என தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆக்சிஜன் தேவை தற்போது சமாளிக்க கூடிய வகையில் உள்ளதாகவும், படுக்கைகள் அதிகரிப்பது, விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பது குறித்த மனுதாரர்களின் கருத்துக்களை அரசிடம் கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆங்கில மருத்துவம் இல்லாமல் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு தரப்பில் தற்போது அக்சிஜன் பற்றக்குறை இல்லாவிட்டாலும், தமிழகத்திலிருந்து வருபவர்களும் அனுமதிக்கப்படுவதால் வரும் வாரங்களில் 65 டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பெல் நிறுவனம் தரப்பில் திருச்சி, ராணிப்பேட்டை நிறுவனங்களில் புதிய அக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மருந்து மற்றும் தடுப்பூசி ஆகியவை எதிர்காலத்திற்கான திட்டத்தை குறிப்பிடவில்லை இல்லை எனக்கூறி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சமமான அளவில் மருந்து மற்றும் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஒதுக்கீடுகள் குறைவாக உள்ளது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு ஏதாவது முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுத்தினர். மருத்துவமனைகள், கல்வி நிலையங்களை சிகிச்சை மையங்களாக மாற்றுவது அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது என்றும், சிகிச்சை மையங்களாக மாற்றும் செலவினம், நேர விரயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் என தெரிவித்தனர்.
கரோனா பரிசோதனை எடுத்து அதன் முடிவுகளை தெரிவிக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆவதாக குற்றச்சாட்டுகள் வருவதால், எவ்வளவு சீக்கிரம் முடிவுகளை தெரிவிக்கப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தனர். மயானங்களில் உடல்களை அடக்கம் செய்யும்போது அவை கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படுகிறதா என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிபடுத்தவும் உத்தரவிட்டுள்ளனர். பயணிகள் வாகனங்களை அக்சிஜன் படுக்கைகள் கொண்டதாக மாற்றும்போது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஆக்சிஜன் செலுத்தக்கூடாது என்ற கோரிக்கையையும் அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
இரண்டாவது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் செயல்பட வேண்டும் என்றும், மத்திய அரசு ஒதுக்கீடு இல்லாமல் தனியாரிடமிருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை மே 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.