![annal ambedkar birthday incident theni district periyakulam](http://image.nakkheeran.in/cdn/farfuture/gsFHABl4dsXY1I70U324KjdlyrIeN1YS5Z1jMpYT9ks/1681553574/sites/default/files/inline-images/theni-art.jpg)
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டாளம்மன் கோவில் தெரு, இளைஞர்களும் டி.கல்லுப்பட்டி இளைஞர்களும் அக்கினி சட்டி மற்றும் மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தனர். அப்பொழுது ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் விழா கமிட்டியாளர்கள் வைத்திருந்த சேர் மற்றும் இருசக்கர வாகனங்களை விழாவிற்கு வந்திருந்த இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.
மேலும் மோதலைத் தடுக்க வந்த காவல்துறையினர் மீதும் இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் சிலர் வடகரை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்திற்குள் கல் வீசித் தாக்கினார்கள். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆய்வாளர் வாகனம், 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை உடைத்தனர். இந்த கல்வீச்சில் காவல் ஆய்வாளர் மீனாட்சி உட்பட பல 13 காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டது.
கலவரம் நடந்தது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே விசாரணை நடத்தினார். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 10க்கு மேற்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் கலவரம் ஏற்பட்ட பகுதியை பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷரிப் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலவரம் நடந்த பகுதியில் அதிக அளவு போலீஸ் குவிக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.