தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என அண்மையில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ளது. அதிலும், "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது. தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்'' என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டின பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது எனவே அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பட்டண பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது. இதே மாதிரிதான் ஸ்ரீரங்கத்தில் கூட ஒரு ஆச்சாரியாருக்குப் பட்டின பிரவேசம் செய்யும் போது இந்த மாதிரி செய்தார்கள். பட்டண பிரவேசத்தைத் தடுக்கக்கூடிய அருகதை இந்த அரசாங்கத்திற்கும் கிடையாது, எந்த ஒரு இயக்கத்திற்கும் கிடையாது. அது நம்முடைய சிஷ்யர்கள் பண்ணக்கூடிய ஒரு பணி. அதை செய்தே தீருவார்கள். நான் மன்னார்குடி ஜீயராக சொல்கிறேன் இந்த மாதிரி தர்ம துரோகிகளுக்கும், தேச துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறோம். இந்து விரோதமான செயல்கள், இந்து தர்மத்தில் தலையீடு செய்தால் அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் நடமாட முடியாது ரோட்டில்'' என்றார்.
இந்நிலையில், திராவிடர் கழகம் வழக்கறிஞர் துரை அருண் தலைமையில் இன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி அலுவலகத்தில், தமிழ்நாட்டின் அமைச்சர்கள் தெருவில் நடமாட முடியாது என்று அமைச்சர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக கொலை மிரட்டல் விடுத்த மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.