திண்டுக்கல் நத்தம் ரோட்டில் டோல்கேட் அமைத்தால் மக்களுடன் இணைந்து போராடுவேன் என முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகனை சந்தித்து டோல்கேட் மற்றும் நத்தம் தொகுதியில் செய்யக் கூடிய பணிகள் குறித்து கோரிக்கை மனுவை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொடுத்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நத்த விஸ்வநாதன், “திண்டுக்கல் நத்தம் ரோடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ள நிலையில், ரோடு தரமற்றதாக உள்ளது. அந்த ரோட்டில் டோல்கேட் அமைத்து வரி வசூல் செய்தால் அதை தடுக்க மக்களுடன் இணைந்து போராடுவேன். நீதிமன்றமும் சென்று தடை செய்ய முயற்சிப்பேன். அதோடு நத்தம் தொகுதிக்கு தேவையான பட்டியலை ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன்.
தொகுதியில் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். அதற்கு இடம் தேவை என்றால் என் இடத்தையும் கொடுப்பேன். அதுபோல் மின்மயானம் அமைக்க எனது எம்.எல்.ஏ நிதியிலிருந்து நிதி ஒதுக்க தயாராக உள்ளேன். அது போல் சிறுமலையில் துவங்கப்பட்ட பல்லுயிர் பூங்கா பணிகளுக்கு நிதி ஒதுக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சிறுமலைக்கு அஞ்சுகுழிபட்டியில் இருந்து நடக்கும் இரண்டாவது பாதை பணியை விரைந்து முடித்தால் சுற்றுலா பயணிகள் பலன் பெறுவார்கள். மலை கிராமங்களுக்கு வனத்துறை அனுமதியுடன் ரோடுகள் அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிக்கு அருகில் சட்டக் கல்லூரி அமைந்தால் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயனடைவார்கள்” என்று கூறினார்.