கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள பழைய சன்னியாசி பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் முருகானந்தம் (வயது 48). இவருக்கு பராசக்தி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
முருகானந்தம் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்று இறக்கி விட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு சரக்கு ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராத விதமாக முருகானந்தம் இறந்து போனார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது மனைவி பராசக்தி, தனது கணவரின் உடலை தான் வசிக்கும் வீட்டில் தான் வைத்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது முருகானந்தத்தின் தந்தை குப்புசாமி, தான் வசிக்கும் வீட்டில் தான் தனது மகனின் உடலைக் கொண்டு சென்று வைத்து பின்னர் அங்கிருந்து அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இருவரும் இறந்து போன முருகானந்தம் உடலை தங்கள் வீட்டுக்குத் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். இருவரில் ஒருவரும் விட்டுக் கொடுக்காததால், பராசக்தி நடுவீரப்பட்டு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். இறந்து போன முருகானந்தம் உடலை அடக்கம் செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதை அறிந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் கணவன் இறந்து விட்டால், அவரது மனைவிக்குத் தான் அதிக உரிமை உள்ளது. எனவே, முருகானந்தம் உடலை பராசக்தி வசிக்கும் வீட்டில் வைத்து பிறகு அடக்கம் செய்வதற்கு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முருகானந்தம் உடல் பராசக்தி வீட்டிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அனைவரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் நடுவீரப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.