![Thaipusam festival in Murugan temples Darshan of many devotees](http://image.nakkheeran.in/cdn/farfuture/YnD7WeJczwgVBYnfuaOFpV7crdSEV2Dy9WStSQzcMpI/1739242655/sites/default/files/inline-images/thaipoosam-art-1.jpg)
தைப்பூச திருவிழாவையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி சூரிய உதய தீபாராதனையில் பங்கேற்ற பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5,ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பழனி அடிவாரம் முதல் பேருந்து நிலையம் வரை என சுமார் 2 கி.மீ. தூரத்திற்குத் தரிசனத்திற்காகப் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (10.02.2025) நடைபெற்றது. அப்போது வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமரவேல் வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், பழனிக்குப் பக்தர்கள், பாதை யாத்திரையாகப் படையெடுத்துச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அதே போன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திரு விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் சென்னை வடபழனி முருகன் கோயில், கோவை மருத மலை முருகன் கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே சமயம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 154வது ஜோதி தரிசன விழா இன்று (11.02.2025) காலை 06:00 மணிக்கு வள்ளலாரின் சத்திய ஞான சபையில் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.