![POCSO case against physical education teacher for incident happened to Government School Girls](http://image.nakkheeran.in/cdn/farfuture/ID-96HDW3xbjYeRjQLfyRr1g8jtSkqRN0l3MKtmW0MQ/1739206609/sites/default/files/inline-images/arrestni_1.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிளிக்குடி அஞ்சல் பெருமாள்பட்டியைச் சேர்ந்த அடைக்கலம்(45). கடந்த வாரம் அந்த அரசு உயர்நிலைப் பள்ளி புகார் பெட்டியில் கிடந்த மாணவிகள் எழுதிய ஒரு புகார் மனுவைப் பார்த்த தலைமை ஆசிரியர் மனு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் விசாரனை செய்ததுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு மனு குறித்து தகவல் கொடுத்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலபிரியா ஆகியோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரனை செய்த போது, பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் அடைக்கலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் அடைக்கலத்தை கைது செய்தார்.