Skip to main content

குடற்புழு நீக்கும் மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!

Published on 10/02/2025 | Edited on 10/02/2025

 

 People involved in road blockade for Student passed away after consuming deworming pill

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட மாணவி திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியினர் கூலி வேலைக்காக வந்து பேராவூரணி அருகில் உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் குடிசை அமைத்து தங்கியுள்ளனர். இவர்களது குழந்தைகள் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் கவிபாலா(13), 7 ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து இந்தப் பள்ளியில் படிக்கும் 389 மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கியுள்ளனர். மாணவ, மாணவிகள் மாத்திரை சாப்பிட்டுள்ளனர். 

இந்த நிலையில் மாணவி கவிபாலா மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி சரிந்த நிலையில் மூக்கில் ரத்தம் வெளியேறி பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளார். உடனே ஆசிரியர்கள் மாணவியை அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர் கவிபாலா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனே மாணவி கவிபாலா உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதே பள்ளியில் படிக்கும் +2 மாணவி சகாயமேரி, 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி தியா ஆகியோருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்களுக்கு அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவி கவிபாலா உயிரிழந்த சம்பவம் கிராமங்களுக்குள் பரவிய நிலையில் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மேலும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். மேலும், பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மாணவி கவிபாலா குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன் மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளை பார்த்து நலம் விசாரித்தார். பள்ளியிலேயே உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் குடிசையில் வசிக்கும் மாணவி குடும்பத்திற்கு வீட்டுமனைப் பட்டாவும், குடியிருக்க அரசு வீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். இந்த கோரிக்கைகள் அரசு கவணத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றுவதாக சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்