பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று (16-01-25) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 10 சுற்றுகள் நடைபெறுவதாக இந்த போட்டி, 9வது சுற்றுறோடு முடிவடைந்தது.
இறுதிச்சுற்று முடிவில், 20 காளைகளைப் அடக்கி அபிசித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி பொதும்பு ஸ்ரீதர் இரண்டாவது இடத்தையும், 10 காளைகளை அடக்கி மடப்புரம் விக்னேஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். முதலிடத்தை பிடித்த அபிசித்தருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசாக வழங்கினார். 2ஆம் இடம் பிடித்த பொதுபு ஸ்ரீதருக்கு ஆட்டோ பரிசு வழங்கப்பட்டது. 3ஆம் இடம் பிடித்த வீரர் விக்னேஷுக்கு எலெக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
சேலத்தில் இருந்த அழைத்து வரப்பட்ட பாகுபலிக்கு சிறந்த காளைக்கான முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது. காளை உரிமையாளர் வக்கீல் பார்த்தசாரதிக்கு சிறந்த காளைக்கான 2ஆம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தாய்ப்பட்டி கண்ணன் காளைக்கு 3வது பரிசாக இ-பைக் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர், காளைக்கு கார், டிராக்டர் பரிசாக வழங்கப்படுகிறது.