தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் மிகச் சிறப்பாக கொண்டாடும் பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் காணும் பொங்கல் மிகவும் சிறப்பு பெற்றது. காணும் பொங்கலில் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் சுற்றுலா தளங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிறைந்த அனைத்து இடங்களிலும் கூடி மகிழ்ச்சியை கொண்டாடி பொங்கல் வாழ்த்துகளை பரிமாறி கொள்வார்கள்.
இந்த நிலையில், சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று காலை முதல் சிதம்பரம் சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வழக்கத்திற்கு மாறாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதே நேரத்தில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கிள்ளை, பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீனவர்களுக்குள் படகுப்போட்டி நடத்தினார்கள். இதனையும் சுற்றுலா வந்த பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதே போல சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் ஏராளமான குவிந்தனர். இதில் பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அதேபோல் சிறார்கள், பெரியவர்கள், பெண்கள் கோலாட்டம், சிலம்பாட்டம், கோகோ, கபடி ஆகிய விளையாட்டுகளை கவலைகளை மறந்து ஆடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை, கோவில் மற்றும் சுற்றுலா தளங்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.