பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று (16-01-25) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
அதே போல், சிவகங்கை மாவட்டம் சிறாவயல் பகுதியில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், அனுமதியின்றி அவிழ்த்துவிடப்பட்ட மாடு முட்டி காரைக்குடி அருகே உள்ள பெரிய உஞ்சனையைச் சேர்ந்த சுப்பையா (41) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவரை காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராட்சண்டர்திருமலை பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி பார்வையாளர் குழந்தைவேலு (67) என்பவர் காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். அதே போல், சேலம் ஆத்தூர் அருகே செந்தூரப்பட்டியில் நடைபெற்ற எருதாட்டம் நிகழ்ச்சியில், காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) என்பவர் உயிரிழந்துள்ளார்.