சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய ஜோ பைடன், “இன்று, அதீத செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு தன்னலக்குழு அமெரிக்காவில் வடிவம் பெறுகிறது. அது நமது முழு ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் அச்சுறுத்துகிறது. ட்ரம்பைச் சுற்றியுள்ள அதி பணக்காரர்கள், அதிக செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றின் செறிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இது நமது முழு ஜனநாயகத்தையும் உண்மையில் அச்சுறுத்துகிறது.
அமெரிக்கர்கள் தவறான தகவல் மற்றும் தவறான தகவல்களின் பனிச்சரிவின் கீழ் புதைக்கப்பட்டுள்ளனர். இது அதிகார துஷ்பிரயோகத்தை செயல்படுத்துகிறது. உண்மை பொய்களால் நசுக்கப்பட்டு அதிகாரத்திற்காகவும் லாபத்திற்காகவும் சொல்லப்படுகிறது. நமது குழந்தைகள், நமது குடும்பங்கள் மற்றும் நமது ஜனநாயகத்தை துஷ்பிரயோக சக்திகளிடமிருந்து பாதுகாக்க சமூக தளங்களை நாம் பொறுப்பேற்க வேண்டும். காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், அதிகாரம் மற்றும் லாபத்துக்காகத் தங்கள் சொந்த நலனுக்குச் சேவை செய்வதற்கும் நாம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அகற்ற, சக்தி வாய்ந்த சக்திகள் தங்களுடைய சரிபார்க்கப்படாத செல்வாக்கைப் பயன்படுத்த விரும்புகின்றன” என்று கூறினார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் முன்னணி தொழில் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஏ எலாக் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். மேலும், டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் செலவுக்காக, எலான் மஸ்க் ரூ.1000 கோடி செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், டிரம்பை சுற்றியுள்ள பணக்காரர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ஜோ பைடன் கூறிய கருத்து எலான் மஸ்க்கை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது.