சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 26-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிக்கு, என்.எல்.சி இந்தியா நிறுவன நிதித்துறை முதன்மைப் பொது மேலாளர் மதிவாணன் தலைமை வகித்துப் பேசினார். கிளைத் தலைவர் சத்தியநாராயணன் வரவேற்றார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குநர் கதிரேசன் வாழ்த்துரையாற்றினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ, மாணவிகள் ஏன்? எதற்கு? எப்படி? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி பாடத்தை தெளிவுடன் படிக்க வேண்டும். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் "நோபல் பரிசு' இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி கொள்ளவேண்டும். மாணவர்கள் பாடத்தை ஆர்வத்துடன் பயின்றால் நோபல் பரிசு வெல்லும் அளவுக்கு உயரலாம் என்றார் .
மாநாட்டில், நலமான, பசுமையான, வளமான இந்தியாவுக்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் 35 பள்ளிகளிலிருந்து 124 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தோட்டக்கலை பிரிவைச் சார்ந்த முனைவர் பத்மநாபன் தலைமையில் 10 நடுவர்கள் ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து 12 குழுக்களை மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்தனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலர் தாமோதரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஸ்டீபன்நாதன், பரங்கிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பல்கலைக்கழக கல்வித் திட்ட இயக்குநர் ராஜசேகரன், தேர்வான 12 குழுக்களை பாராட்டி நிறைவுரை வழங்கினார். மாநாட்டை மாவட்ட என்எல்சி ஒருங்கிணைப்பாளர் பாலகுருநாதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் வழிநடத்தினர். மாநாட்டில் மாணவர்களின் ஆய்வறிக்கை உள்ளடங்கிய, ஹரிஹரன் உருவாக்கிய சிறப்புமலர் வெளியிடப்பட்டது.
மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நெய்வேலியில் உள்ள ஜவகர் பள்ளி, என்.எம்.ஜே. பள்ளி, சேக்ரட் பள்ளி, பண்ருட்டியில் உள்ள ஜான்டூயி, சாரதா வித்யாலயா, கடலூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளி, துளிர் இல்லத்தை சேர்த்து 2 குழுக்களில் மொத்தம் 12 குழுவினர் வருகிற நவ.16,17,18 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்கிறார்கள். சிதம்பரம் கிளை பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.