Published on 20/08/2019 | Edited on 20/08/2019
தேனி தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரவீந்திரநாத் குமார். இவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வரின் மகனாவார். மக்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி ஆதரவு தெரிவித்தது அக்கட்சிக்குள் பெரும் அதிருப்தி நிலவியது. முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக கொடுத்த ஆதரவால் தான் அதிமுக வேலூரில் தோல்வி அடைந்தது என்ற குற்றச்சாட்டும் வந்தது.

மேலும் ஓபிஎஸ் தனது மகனுக்கு மத்திய அமைச்சரவை விரிக்கத்தின் போது மத்திய அமைச்சர் பதவி வாங்கவே முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு கொடுத்துள்ளார் என்ற செய்தியும் பரவியது. இந்த நிலையில் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். அதில் நான், தனிப்பட்ட முறையிலேயே முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்தேன்' என கூறியுள்ளார். மேலும் கேபினட் அமைச்சர் பதவிக்காததான் ஆதரித்து வாக்களித்தீர்களா எனக் கேள்வி எழுப்பியபோது 'அதுபற்றி யோசித்தது கூட இல்லை' எனத் தெரிவித்தார். இருந்தாலும் அதிமுகவில் வேலூர் தேர்தல் தோல்விக்கு இது தான் மிக முக்கிய காரணமாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் பேசிவருகின்றனர்.