மழைநீர் வடிகால் பணிகள் குறித்த திட்டம் யாருடைய திட்டம். நிதி ஒதுக்கியது யார். இது போன்றவற்றை வெளிப்படையாக சொல்ல முடியுமா? நாங்கள் போட்ட திட்டத்தை தான் இன்று நீங்கள் அமல்படுத்துகிறீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனிசாமி ஆட்சிக்காலத்தில் மூன்று இடங்களில்தான் தண்ணீர் தேங்கியது. உடனே ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி 2400 கிலோ மீட்டருக்கு ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை போட்டோம். அத்திட்டத்தில் 1500 கிலோமீட்டர் நாங்களே முடித்துவிட்டோம். மீதமுள்ள பணிகள் இரண்டாம் பாகத்தில் முடிக்கப்பட வேண்டிய விஷயம். அப்போ, இது யாருடைய திட்டம்; நிதி ஒதுக்கியது யார்; இதுபோன்றவற்றை வெளிப்படையாக சொல்ல முடியுமா? நாங்கள் போட்ட திட்டத்தை தான் இன்று நீங்கள் அமல்படுத்துகிறீர்கள். நாங்கள் செய்த திட்டத்தால் தான் இன்று தண்ணீராவது போச்சு.
கொளத்தூர் தொகுதிக்கு எந்த ஊடகமும் போகக் கூடாதா? கொளத்தூர் தொகுதி என்ன கன்னித்தீவா? கொளத்தூர் தொகுதி என்றே அதை சொல்லக்கூடாது. ‘குளமூர்’ என்று தான் சொல்ல வேண்டும்.
எங்கள் மேல் வழக்கு போட்டு சிறையில் தள்ளினால் நாங்கள் பயந்து விடுவோமா. தமிழகத்தில் உள்ள அத்தனை சிறைகளையும் பார்த்தவன். அரசியல் போராட்டங்களில் நிறைய சிறைகளைப் பார்த்துள்ளேன். திமுக ஆட்சி எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுவார்கள். பொய் வழக்குகள் போட்டு அதிமுகவை முடக்கி விடலாம் என நினைத்தால், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகத்தான் முடியும்” எனக் கூறினார்.