தேனி மாவட்டத்தின் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாவட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கு வருடந்தோறும் துணை முதல்வர் ஓபிஎஸ் தீபாவளி போனஸ் கொடுப்பது வழக்கம்
தீபாவளி போனஸை அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டம், நகரம், ஒன்றிய கட்சி பொறுப்பாளர்களிடம் கொடுத்து ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கு கொடுக்கச் சொல்வது வழக்கம். ஆனால், இப்படி ஓபிஎஸ்சிடம் தீபாவளி போனஸ் வாங்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் ஓபிஎஸ் கொடுக்கும் பணத்திலேயே பாதியை சுருட்டிக்கொண்டு மீதியைத்தான் தீபாவளி போனஸாக இதுவரை கொடுத்து வந்ததாக பேச்சு நிலவியது. இதனால் கட்சிக்காரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வந்தது இந்த விஷயம் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு இந்த ஆண்டு தான் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த தீபாவளிக்கு கட்சி பொறுப்பாளர்களிடம் தீபாவளி போனஸ் பணத்தைக் கொடுக்காமல் தானே நேரடியாக தீபாவளி போனஸ் கொடுக்க ஓபிஎஸ் முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில் கல்லுபட்டி அருகே உள்ள ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டுக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆறு நகர செயலாளர்கள். எட்டு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் 22 ஊராட்சி செயலாளர்களுடன் கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கட்சிகாரர்கள் பலரையும் ஓபிஎஸ் நேரடியாகவே வரச்சொல்லி கடந்த 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் தீபாவளி போனஸை கட்சிக்காரர்களுக்கு" கவர்" போட்டு வழங்கினார். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு தலைக்கு 50 ஆயிரம் எனவும், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கு தலைக்கு இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரையும், அதுபோல் கட்சிகாரர்கள் பலருக்கும் கவர் போட்டு தீபாவளி போனஸை ஓபிஎஸ் நேரடியாகவே வழங்கியுள்ளார். அதுபோல் சார்பு அணியை சேர்ந்த மாவட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் கிளைகழக பொறுப்பாளர்களுக்கும் ஒரு கணிசமான தொகையை ஓபிஎஸ் தீபாவளி போனஸ் ஆக கொடுத்தார்.
அதைக்கண்டு கட்சிப் பொறுப்பாளர்கள் பூரித்துப் போய் விட்டனர். அதோடு தங்கள் மனதில் உள்ள குறைகளையும் ஓபிஎஸ் இடம் நேரடியாக கூறியதுடன் மட்டுமல்லாமல் தங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென பல கட்சி பொறுப்பாளர்கள் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அந்த அளவுக்கு ஓ பி எஸ் சை நேரில் சந்தித்து தீபாவளி போனஸ் வாங்கி கொண்டு தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்து கூறிவிட்டுச் சென்றனர். ஏற்கனவே ஓ பி எஸ்சை சரிவர பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை என்ற மன வருத்தம் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரிடம் இருந்து வந்தது, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் ஓபிஎஸ் கட்சிக்காரர்களை நேரில் அழைத்து தீபாவளி போனஸ் கொடுத்து அனுப்பி இருக்கிறார் என கூறப்படுகிறது.