திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, கீழக்குயில்குடி, ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், இந்தப்பகுதியில் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தபோது இங்கு குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்றும் பேசி உள்ளார்.
மு.க.ஸ்டாலினும் இது போலத்தான் பேசுகிறார். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ரூ.10.20 கோடி மதிப்பில் விரைவில் குடிநீர் பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளை துரோகிகள் என்கிறார் தினகரன்.
ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சியை தி.மு.க.வுடன் இணைந்து கவிழ்க்க துடிக்கிறார் தினகரன். இதனால் தினகரன் தான் உண்மையான துரோகி என்பதை தொண்டர்கள் தெரிந்து கொண்டனர். எனவே அ.தி.மு.க. ஆட்சியை தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. இங்கு வெற்றி பெற்றதும் திருப்பரங்குன்றத்தை முதன்மை தொகுதியாக மாற்றுவோம் என்றார்.