Skip to main content

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

ddd

 

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, சரி செய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. 

 

சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

 

கோடை வெயில்,  கரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75% வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த இயந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், சென்னை வேளச்சேரி தொகுதியில்  வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர். 

 

அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அவை வாக்குப் பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

 

தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்ட அஸ்ஸாமில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாஜக வேட்பாளரின் காரிலேயே கொண்டுசெல்லப்பட்டதையும், அந்தக் காரை மடக்கிப் பிடித்ததற்காக பொதுமக்கள்மீதே வழக்கு போடப்பட்டிருப்பதையும் பார்த்தோம். அத்தகைய நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது. அதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் விழிப்போடு இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். 

 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி வரை அவற்றைப் பாதுகாப்பதிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனிக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விசாரணை அமைப்புகளை கடுமையாக விமர்சித்த தொல். திருமாவளவன் எம்.பி.

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Thol Thirumavalavan MP talks in INDIA alliance rally

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று (31.03.2024) ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சுனிதா கெஜ்ரிவால் என 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Thol Thirumavalavan MP talks in INDIA alliance rally

இந்த கூட்டத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பேசுகையில், “இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் இணைவார்கள் என்று பா.ஜ.க. நினைக்கவில்லை. இந்தியா கூட்டணியில் கெஜ்ரிவால் இணைந்ததால் தான் மத்திய பா.ஜ.க. அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்டவை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி இங்கு கூடியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” எனப் பேசினார்.