நம்முடைய செல்போனிற்கு வந்த அந்தக் குரல் தழுதழுத்த நிலையில், "எங்களுக்கு வேறு வழி தெரியல. நக்கீரனை விட்டா வேற நாதியில்ல...' என்கிற தவிப்போடு நம்மிடம் பேசியது. "சார்,…நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். மக்களிடம் தினசரி இரண்டறக் கலந்திருக்கும் ஆவின் பால் நிறுவனத்தில் தினசரி கஷ்டப்பட்டு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களை மிரட்டி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கு லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். கொஞ்சம் விசாரிச்சு எழுதுங்க சார். எம்.ஜி.ஆர். பெயரில் ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்தை இந்த சேர்மன் கார்த்திகேயனும் அவருடைய தம்பி அரவிந்தும் சேர்ந்து உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள்'' என்று புலம்பித் தீர்த்தார். அதே நேரத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருச்சி ஆவின் சேர்மனான கார்த்திகேயன், "என்னோட 20 வருட அரசியலுக்கு முதல்வர் எடப்பாடி கொடுத்திருக்கிற இந்தப் பதவியை பயன்படுத்தி அவருக்கு பெருமை சேர்ப்பது மாதிரி நடந்துகொள்வேன். நீங்க ரெகமண்டேஷன்னு யாரையும் கூட்டிக்கிட்டு வரவேண்டிய அவசியம் இல்ல. நேரடியா பேசுங்க நானே பேசிக்கிறேன்'' என்றார்.
என்ன நடக்கிறது ஆவின் பண்ணையில் என விசாரணையில் இறங்கினோம். கார்த்திகேயன் பொறுப்பேற்றவுடன் ஆவின் ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாளர்களாக நாகராஜன், குருநாதன் என இரண்டுபேரை அலுவலகத்தில் பொறுப்பாளராகப் போட்டார். 2005-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஈட்டு விடுப்பு, ஈட்டா விடுப்பு சம்பளம் கொடுக்க வேண்டும், இந்தப் பணத்தை வாங்குவதற்கு 40 சதவீதம் லஞ்சமாக பணத்தை முன் கூட்டியே கொடுத்தால்தான் இந்த விடுப்பு பணத்தை இவர்கள் கொடுக்கிறார்கள். வேறு வழி தெரியாமல் குடும்ப நெருக்கடி காரணமாக லஞ்சம் கொடுத்து ஈட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஓய்வுபெற்றோர். லஞ்சம் கொடுக்காதவர்களிடம், "நீங்க எப்படி வாங்குறீங்கன்னு பாக்குறேன்' என்று சேர்மன் தம்பி அரவிந்தன் மிரட்டுகிறார்.
தினமும் குறைந்தது 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது. இதில் 1 ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை தனியாக கமிஷன் எடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் கமிஷன் வந்தால் சும்மாவா இருப்பார். நல்ல நிலையில் இருந்த அலுவலகத்தை 20 லட்ச ரூபாய்க்கு புதுப்பித்துள்ளார். இந்த ஆவின் பால்பண்ணையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்தவர்களை இன்னும் ஒப்பந்த ஊழியர்களாவே வைத்திருக்கிறார்கள். யாரையும் நிரந்தரம் ஆக்கவில்லை. உச்சகட்டமாக மனோகர் என்பவரை 3 வருடமாக ஒப்பந்த ஊழியராகவே வைத்திருக்கிறார். "இதுவரை ஆவினில் 96 போஸ்டிங் போட்டிருக்கிறார்கள். இதில் 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வாங்கியிருக்கிறார்கள். இப்போ 200 பணிகளுக்கு போஸ்டிங் போடப்போகிறார்கள். இதிலும் கடைசிநாள் நேரில் கொண்டுவந்து கொடுத்த விண்ணப்பத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்' என்கிறார்கள் அங்கு பணியாற்றியோர்.
ஓய்வுபெற்றோருக்கு லஞ்சமின்றி ஈட்டுத்தொகை பெற்றுத்தர நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக முறையிடு பவரான இலக்குமணகுமார் நம்மிடம், "2016 வரை திருச்சி ஆவின் லாபத்தில் இயங்கியது. இப்போது நட்டத்தில் தள்ளாடுகிறது'' என்கிறார்.
"இப்படி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் இந்த நிறுவனத்தை வைத்து சம்பாதித்தவர்களுக்கு அவர்களுடைய அரசியல் வாழ்வுக்கு இந்த பதவிதான் கடைசியாக இருந்துள்ளது. இந்தப் பதவிக்கு பிறகு உயர் பதவிக்கு சென்றது இல்லை. உதாரணமாக பொன்.கலிய பெருமாள், திருநாவுக்கரசு, இளவரசன், கே.கே.தங்கராசு, ஆயிலை பழனியாண்டி, எஸ்.எம்.ராஜேந்திரன், இப்போ கார்த்திகேயன்.
இவர், 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மரியம்பிச்சையுடன் அ.தி.மு.க.வில் நுழைந்தவர். மரியம்பிச்சை சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்துவந்த நிலையில்... அவருடைய உதவியால் சென்னையில் உள்ள சினிமா புரோக்கர் இவருக்கு நெருக்கமாகவும், அவர் மூலம் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் இவருக்கு மிகநெருக்கமாகவும் மாற இந்த பழக்கத்தில் பலரையும் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு அழைத்துவருவார். இவர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் கிடைத்ததும் அவர் மூலம் மாவட்டச் செயலாளர் சிபாரிசு இல்லாமல் மாவட்ட மாணவர் அணி பொறுப்பு கிடைத்தது. தற்போது மாவட்ட ஆவின் சேர்மன் பதவி என தன் தகுதிக்கு மேல் அரசியலில் வளர்ச்சியடைந்துள்ளார் "ஆவின்' கார்த்திகேயன். அடுத்து தன்னுடைய தம்பிக்கு கவுன்சிலர் பதவியும், தனக்கு கிழக்கு தொகுதியும் கூடுதலாக மா.செ. பதவியும் முதல்வர் தரப்போகிறார் என்று எங்கேயும் எப்போதும் எடப்பாடியின் கிச்சன் கேபினட் பெயரைத்தான் பயன்படுத்துகிறார்.
ஆவின் வழியே வந்த வருமானத்தின் மூலம் முதல்வர் எடப்பாடி பெயரை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பான, ரஜினியின் "தர்பார்' படத்திற்கு திருச்சி பகுதியான டி.டி. ஏரியா முழுவதும் ரைட்ஸ் வாங்கியிருக்கிறார். கடந்த 10 நாளில் "பிளஸ் மேக்ஸ்' என்கிற நிறுவனத்தை தன்னுடைய தம்பி அரவிந்த் பெயரில் ஆரம்பித்து 7.40 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி முடிப்பதற்காக சென்னையில் இருந்த பாலாஜி என்பவரை நியமித்து இருக்கிறார். ரஜினியின் படங்களிலே அதிக விலைக்குப் போனது இந்தப் படம்தான்'' என்கிறார்கள்.
இத்தோடு இல்லாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு எழுத்து ஓட்டலை விலைக்கு பேசி முடித்துள்ளதாகவும் பேச்சு உலவுகிறது. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக ஆவின் சேர்மன் கார்த்திகேயனை நேரில் சந்தித்தோம். குற்றச்சாட்டுகளால் ஆவேசம் அடைந்து பேசியவர், அலுவலகத்தை விட்டு நம்மை வெளியேற்றிவிட்டார்.
-ஜீ.தாவீதுராஜா