தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''தமிழ் வளர்ச்சிக்கென அதிக நிதி ஒதுக்கி தீவிரமாக பணியாற்ற வேண்டியது நம்முடைய கடமை. தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடியாக ஒளிபரப்ப ஆவன செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (19.07.2021) வலியுறுத்தியிருந்தார். ''மக்கள் பிரதிநிதிகள் நடத்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்துகொள்ள நேரடி ஒளிபரப்பு உதவும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது சவாலான விஷயம் அல்ல'' என நேற்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.