Skip to main content

அ.தி.மு.க - பா.ஜ.க; அமைச்சர் உதயநிதி சொன்ன குட்டி ஸ்டோரி

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

A short story told by Minister Udayanidhi about Admk and Bjp

 

தஞ்சாவூர் மாவட்டம் திலகர் திடலில் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் அதிமுகவையும் பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து பேசினார். அதில் அவர், “நீட் தேர்வால் கடந்த 7 ஆண்டுகளில் 21 மாணவர்களை நாம் இழந்துள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்ய முழு முயற்சி எடுத்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு தி.மு.க வாக்குறுதியில் நீட்டை கண்டிப்பாக ஒழிப்போம் என்று கூறியிருந்தது உண்மை தான். அதற்கான முழு முயற்சியையும் நமது தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். ஒரு முறை அல்ல இரண்டு முறை சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். முதல் தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். உடனடியாக நமது முதல்வர் அனைத்து கட்சியினரையும் கூட்டி இரண்டாவது தீர்மானத்தை கொண்டு வந்து அது தற்போது ஜனாதிபதியிடம் இருக்கிறது.

 

நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க தான் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த போராட்டத்தையும் தி.மு.க தான் நடத்தியது. முதல்வரிடம் அனுமதி பெற்று விரைவில் அடுத்த போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க இளைஞரணியும் ஓயாது நானும் ஓயமாட்டேன். தி.மு.க நடத்திய போராட்டத்துக்கு அ.தி.மு.கவுக்கும் அழைப்பு விடுத்தோம். அதே நாளில் மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கூட நீட் தேர்வு ரத்து என்ற உத்தரவாதத்தை கொடுத்தால் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்கிற ஒரு தீர்மானத்தை அவர்களால் கொண்டு வரமுடியவில்லை.

 

நான் உங்களுக்கு இப்போது ஒரு குட்டிக் கதை சொல்லப் போகிறேன்.  ‘நாம் வீட்டுக்குள் இருக்கிறோம். வீட்டை சுத்தம் பண்ணி வைத்துள்ளோம். ஆனால், வீட்டிற்குள்ளே அடிக்கடி  ஒரு விஷப் பாம்பு வந்து கொண்டிருக்கிறது. அதை எத்தனை முறை அடித்து விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வீட்டிற்குள்ளே வந்து கொண்டே இருக்கிறது. என்ன காரணம் என்று பார்த்தால் அந்த விஷப் பாம்பு குப்பை என்ற புதருக்குள் ஒளிந்து கொண்டு வீட்டுக்குள் வருகிறது. அதை நீங்கள் தற்போதுள்ள அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வீடு என்பது நம்முடைய தமிழ்நாடு. அதை நாம் சுத்தமாக தான் வைத்துள்ளோம். விஷப் பாம்பு என்பது ஒன்றிய பாசிச பா.ஜ.க., அந்த புதர் என்று சொன்னது அ.தி.மு.க. 

 

அ.தி.மு.க எனும் புதருக்குள் பின்னால் ஒளிந்து கொண்டு தான் அந்த விஷப் பாம்பு வீடு என்ற தமிழ்நாட்டுக்குள் நுழையப் பார்க்கிறது. அந்த விஷப் பாம்பை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த குப்பை புதரை சுத்தம் செய்ய வேண்டும். அதுபோல், அ.தி.மு.க எனும் கட்சியை ஒழித்தால் தான் ஒன்றிய பா.ஜ.க.வையும் சேர்த்து நம்மால் ஒழிக்க முடியும். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து அடிமைகளை துரத்தி அடித்தது போல், வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் அடிமைகளையும், அவர்களது எஜமானர்களையும் துரத்த வேண்டும்” என்று பேசினார். 


 

சார்ந்த செய்திகள்