முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ எனும் புதிய கட்சியைத் துவங்கினார். கட்சியின் பெயரை அறிவித்த பின் பழ. கருப்பையா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நேர்மை, எளிமை, செம்மை என்ற கொள்கையின் அடிப்படையில் ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளோம். பணத்தை விதைத்து ஆட்சியைப் பிடிப்பது. ஆட்சியைப் பிடித்ததும் அறுவடை செய்வது. இது ஒரு வகையான நச்சுச் சூழல். இவ்வகையான அரசியல் கடந்த 50 ஆண்டு காலமாக வேறுபாடு இல்லாமல் இரு கட்சிகளால் நடத்தப்பட்டுள்ளது. அரசியலை மாற்றுவதற்கு தொடரப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. நாங்கள் இதில் முயற்சி செய்கிறோம்.
பழைய கால ஆரிய நீதியை நாம் விமர்சனம் செய்கின்றோம். பார்ப்பனன் தவறு செய்தால் சிறிய தண்டனையும் மற்றவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனையும் என்று பேசிய மனுநீதிக்கு மாறாக திராவிட நீதி உருவாகியுள்ளது. கட்சிக்காரன் தவறு செய்தால் அதை ஒன்றும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.” மேலும் பேசிய அவர், “நாளை மறுநாள் மாநாடு நடத்துகிறேன். தொண்டர்களுக்கு மட்டுமான மாநாடு. பொதுமக்களை அனுமதிக்க மாட்டோம். அதில் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.