அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், “ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருப்பது பொதுக்குழு அல்ல. அது எடப்பாடி பழனிசாமிக்கு துதிபாடுகிற கூட்டம். ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பேசுவதை அளவோடு பேச வேண்டும். ஓபிஎஸ்ஸை பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லாத ஜெயக்குமார் ஒருங்கிணைப்பாளரைப் பற்றி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உதவிகேட்டு வந்த பெண்களை மானபங்கப்படுத்தியதால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் இருக்கவேண்டியவர், எடப்பாடி ஆட்சி இருந்த காரணத்தாலும், அமைச்சராக இருந்த காரணத்தாலும் இவர் மீது வழக்குப்போடவில்லை. தொடர்ந்து இவர் பேசுவார் என்றால் அவர் செய்கிற தவறுகளுக்கு வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பப்படுவார் என்பதை ஜெயக்குமாருக்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.