Skip to main content

‘கிருஷ்ணகிரியில் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம்’ - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Published on 06/02/2025 | Edited on 06/02/2025

 

Demonstration in Krishnagiri on 8th Edappadi Palaniswami announcement

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடந்த 45 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவல நிலை தொடர் கதையாக இருந்து வருகிறது.

திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், பல்வேறு குற்றச் செயல்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்துவதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அரசுப் பள்ளி மாணவிக்கு, தான் கல்வி பயிலும் பள்ளியிலேயே பாதுகாப்பு இல்லை என்பது, வேலியே பயிரை மேய்கின்ற செயல். திமுக அரசு இந்தக் கொடூரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ் நாட்டைத் தள்ளியதற்கு,  திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்,  அதிமுக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சார்பில் 8 ஆம் தேதி (08.02.2025 - சனிக் கிழமை) காலை 10 மணியளவில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்,  அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும்.

சிறுமிகள், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய  திமுக  அரசைக் கண்டித்தும்; பெண்களின் பாதுகாப்பை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருவாரியான மகளிர் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்