தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாகவும், இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு நாம் இருவரும் இணைந்து ஆட்சி செய்வோம் என்று ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கொளுத்திப்போட, பற்றி எரிந்தது தமிழக அரசியலில். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி, ஓபிஎஸ் என்னை வந்து சந்தித்தார் என்று கூறினார் தினகரன்.
இந்த சர்ச்சைக்கு இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஓபிஎஸ். அப்போது அவர்,
’’தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்று தினகரன் உச்சகட்டத்திற்கே சென்று, மிகப்பெரிய மனச்சுமையோடு அலைந்துகொண்டிருக்கிறார்.
நான் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறேன். எதற்காக? அந்த குடும்பத்தின் கீழ் கட்சியும் ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன். முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தினகரனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, தினகரன் இல்லத்தில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு, இனிமேல் இந்த குடும்பத்தினருடன் எந்தவிட ஒட்டும் உறவும் இல்லை என்று அமைச்சர்கள் அனைவரும் முடிவெடுத்து வெளியேறி வந்துவிட்டார்கள். அதற்கு பின்னால் இந்த தினகரன், இந்த ஆட்சி இரண்டு நாளில் கலைக்கப்படும். கவிழ்ந்துவிடும் என்று விரக்தியின் உச்சகட்டத்திற்கே சென்று, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு பல வகையிலும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.
44 சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறி, தன் இல்லத்திற்கு ஒவ்வொருவராக வருவதை அவரே வெளியிட்டு வந்தார். நிலைமை மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறதே.. இதனால் கட்சி மீண்டும் ஒரு பிளவுக்கு வந்துவிடுமே என்ற மனக்கவலை எனக்கு வந்தது. 36 சட்டமன்ற உறுப்பினர்களை தினகரன் காண்பித்து ஆட்சியை கவிழ்த்துவிடுவேன் என்று சொன்னபோது, நிருபர்கள் எல்லாரும் என்னிடம் வந்து, உங்களால் இந்த ஆட்சி கவிழுமா என்று என்னிடம் கேட்டபோது, என்னால் ஆட்சி கவிழாது என்று பேட்டி அளித்தேன். உடனடியாக தங்கமணியும், வீரமணியும் என்னிடம் வந்து பேசினார்கள். அப்போது அவர்களிடம், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுங்கள் என்று எடுத்துச்சொன்னேன். நான் உங்களூக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன். தினகரனால் இந்த ஆட்சி கவிழ்ந்தது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று சொன்னேன். அந்த குடும்பம் கட்சி்யிலும் ஆட்சியிலும் வந்துவிடக்கூடாது என்றுதானே தர்மயுத்தம் நடத்தினீர்கள். நாங்களும் அந்த முடிவில்தான் இருக்கிறோம். ஆகவே நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்றனர். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று அன்று முடிவெடுத்தோம்.
இரு அணிகளூம் சேர்ந்தபோது, நான் மூன்று முறை முதல்வர் ஆக இருந்துவிட்டேன். அதுவே எனக்கு போதும். கட்சிப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன். நாங்கள் இணைகிறோம் என்றதும், தினகரனுக்கு ஆதரவளித்த 36 எம்.எல்.ஏக்களில் 18 பேர் வாபஸ் பெற்றார்கள்.
நான் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்தபோது அண்ணன் எடப்பாடியும் தினகரனும் பிரிந்துவிட்டார்கள். அப்போது தினந்தோறும் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று தினகரன் சபதம் போடுகிறார். அந்த சமயத்தில், மனம்விட்டு பேசவேண்டும் என்று எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர் மூலமாக தினகரன் சொன்னதால், அந்த வீட்டில் நானும் தினகரனும் சந்தித்தோம்.
18 பேரை வைத்துக்கொண்டு எங்களுக்குத்தான் ஆதரவு இருக்கிறது என்று தரக்குறைவான அரசியலை நடத்த நினைக்கின்ற தினகரன் எதற்கெடுத்தாலும் பொய் பேசுகிறார். மனம் திருந்திதான் என்னை சந்தித்து மனம் விட்டு பேசவருகிறார் என்று நினைத்தால் பேட்டிகளில் அவர் என்ன சொன்னாரே அதையே என்னிடம் ரிபீட் செய்தார். எடப்பாடி பழனிச்சாமி அண்ணனை ஆட்சியை விட்டு இறக்கிவிட்டு தான் முதல்வர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தான் பேசினார். எனக்கு தூக்கிவாரிபோட்டது. அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால். நான் வந்துவிட்டேன். அதற்கு பின்னால்தான் இந்த நிலை நீடிக்க கூடாது என்று நாங்கள் கூடிப்பேசி இணைந்தோம். நானும் தினகரனும் சந்தித்தது 2017ல் ஜூலை 12ம் தேதி. எடப்பாடி அண்ணனுடன் நான் இணைந்தது செப்டம்பர் 21ம் தேதி. இதுதான் உண்மை.
ஏதோ நான் ஒரு கொலைக்குற்றத்தை செய்தது போல நேற்று முதல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தினகரனை சந்திக்கச்சொல்லி பலர் என்னிடம் வந்து பேசியபோது, அந்த குடும்பத்திற்கு எதிராகத்தான் நான் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அவரையே பார்க்க சொல்கிறீர்களே என்று கேட்டபோது, அவர் மாறிவிட்டார். அரசியலை விட்டே அவர் ஒதுங்கப்போகிறார் என்று சொன்னதால்தான் தினகரனை சந்தித்தேன். நேரில் பேச வேண்டும் என்று சொன்னதால் என்ன சொல்கிறார் என்றுதான் கேட்போமே என்பதற்காகத்தான் சந்தித்தேன். நல்ல வார்த்தையை சொல்லப்போகிறார் என்றுதான் சந்தித்தேன். அரசியல் நாகரீகம் கருதி நான் யாரிடமும் சொல்லவில்லை. இது என்னுடன் இருந்தவர்களுக்கு கூட சொல்லவில்லை. அன்று நடந்த இந்த சந்திப்பை இன்று சொன்னால் ஆட்சியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார் தினகரன்.
என்னுடைய சகோதரருக்கும் இந்த சந்திப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னையும் தினகரனையும் சந்திக்க வைத்த நண்பர் இன்று வந்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இவ்வளவு சின்னத்தனமா அரசியல் செய்வார் தினகரன் என்று நான் நினைக்கவில்லை. அப்படி தெரிந்திருந்தால் நான் அவரை சந்திக்க சொல்லி உங்களை வற்புறுத்தியிருக்க மாடேன் என்று மனம் வருந்தார் அந்த நண்பர்.
இதுவரை நான் உண்மைக்கு புறம்பாக எதையும் சொல்லவில்லை. எனக்கு இருக்கின்ற நல்ல பெயரை கெடுக்கத்தான் அந்த கொடியவர்கள் கூடாரம் சதி செய்துகொண்டிருக்கிறது.
இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசை கவிழ்த்துவிட்டு முதல்வராக வேண்டும் என்ற ஈனத்தனமான வேலை எனக்கு இல்லை. ஆட்சிக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார் தினகரன். நானும் அண்ணன் எடப்பாடியும் இணைந்த பிறகு தினகரன் அணியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை’’என்று ஆணித்தரமாக கூறினார்.