Skip to main content

“அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாறவேண்டும்” - முதல்வர் பேச்சு!

Published on 04/02/2025 | Edited on 04/02/2025
We must become a caring society CM MK Stalin speech

சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (04.02.2025) தொடங்கி வைத்து, அதனைத் தொடர்ந்து அங்கு பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் க. பொன்முடி, தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகரராஜா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலாளர் பி. செந்தில் குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ஏ.ஆர். ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாகவே புகட்ட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான கனவுகள் எல்லாவற்றிற்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது. அதனால்தான், தமிழக அரசு, காலநிலைக் கல்வியறிவை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதாவது தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும்  ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப்படும். காலநிலைக் கல்வியறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்க இருக்கிறோம். எல்லோருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமே அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.

பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத் தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால், பாதிப்படையக் கூடிய வேளாண்மை, நீர்வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வை குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும். வெப்ப அலையை மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறோம். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெப்ப அலை தாக்கத்தின்போது, தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்கவும், மாநில பேரிடர் மேலாண்மை அறிவித்திருக்கிறோம். நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயற்கை வளங்களைப் பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாறவேண்டும். இயற்கைப் பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொண்டு, மீண்டெழக்கூடிய சமூகமாக வளரவேண்டும்.பசுமைத் தொழில்நுட்பங்கள் மூலமாக பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தக்கூடிய சமூகமாகவும், உலகளாவிய காலநிலைக் குறிக்கோள்களை அடைய உறுதுணையாக இருக்கும் சமூகமாகவும் எதிர்காலத்தில் நாம் திகழவேண்டும். தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக கருதி, தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

We must become a caring society CM MK Stalin speech

ஒவ்வொரு முன்னெடுப்பும் இதை மனதில் வைத்துதான் செய்யப்படுகிறது. அது, நீர்நிலைகள் மறுசீரமைப்பு, காலநிலை மீள்திறன் கொண்ட நகரங்களை கட்டமைத்தல் பயோ - டைவர்சிட்டியை (Bio - Diversity) பாதுகாத்தல் என்று காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நம்முடைய உறுதியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எதிர்க்காலத்தில் வரக்கூடிய சூழலியல் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இப்போதே அட்வான்ஸ்சாக (Advance) திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதை உலகத்திற்கு எடுத்துரைக்கும் உரைகல்லாக இந்த மாநாடு விளங்குகிறது. மக்களுக்கு தொடர்ந்து காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படும் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதியளிக்கிறேன்” எனப் பேசினார்

சார்ந்த செய்திகள்