ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது.இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு சி எஸ் ஐ பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்திய பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி செய்தியாளர்களிடம், “பாஜக தேர்தலை புறக்கணித்தாலும் ஜனநாயக கடமையான வாக்களிக்க வந்துள்ளேன். பொதுவாக இந்த இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக நடக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மூன்றாவது தேர்தலாகும். இவ்வாறு அடிக்கடி தேர்தல் நடப்பதால் மக்களுக்கும் கஷ்டம். அரசுக்கு வீண் செலவு. நிர்வாகம் பாதிக்கிறது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அமலாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால் தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகிறது.
இது குறித்து சட்டம் இயற்றி தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருவது தான் சிறந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் என்றாலும் மேற்கு தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ” என்றார்.