![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/0cSwt6C7FjbUCz7qGN_Tk4brUB7YPwYXwLfh0wLLFoQ/1738948912/sites/default/files/inline-images/a2479.jpg)
கிராம ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமனம் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 2019-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு 28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் 05.01. 2025 அன்று முடிவடைந்ததை அடுத்து இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்டனர். எவ்வாறு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள் அனைவரும் முறையே 06.01.2025 அன்றே பொறுப்பேற்று கிராம ஊராட்சிகளை நிர்வகித்து வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சிகளின் செயல் அலுவலராக செயல்பட்டு வந்த கிராம ஊராட்சி தலைவர்கள் மேற்கொண்ட பணிகள் அந்தந்த கிராம ஊராட்சிகளின் தனி அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் கள் திறம்பட மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் அனைத்து மக்களின் கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது தவிர அந்தந்த ஊராட்சியின் ஊராட்சி செயலாளர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களுடன் பொதுமக்களின் அடிப்படைத் தேவை சார்ந்த புகார்கள் மற்றும் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி வாழும் நிலை உருவாகியுள்ளது.
இதுதவிர கிராம ஊராட்சிகளில் நிதி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டத்தில் தனி அலுவலர்கள் கையாளுவதற்கான மாற்றங்கள் முழுவதும் மேற்கொண்டு தற்போது ஊராட்சி சார்ந்த நிதி பரிவர்த்தனைகளை அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் முதல் நிலை ஒப்புதல் வழங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் இறுதி ஒப்புதல் அளித்து நிதி பரிவர்த்தனைகளும் எவ்வித தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதால் கிராம ஊராட்சிகளில் நலத்திட்டப் பணிகள் மற்றும் அடிப்படை பணிகள் எவ்வித தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் கிராம ஊராட்சிகளுக்கு தேவையான நிதிகளை தங்கு தடையின்றி வழங்குவதோடு அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது' என கூறியுள்ளார்.