திருப்பத்தூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் கோ.புளியம்பட்டியை சேர்ந்தவர் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருப்பதி. இவருடைய வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் நிலம் ஒன்று இருந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான அந்த நிலத்தில் தனக்கு 12 அடி அளவில் பாதை வேண்டும் என திருப்பதி வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கான பத்திரப்பதிவு இன்று நடக்க இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பதியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் திருப்பதியின் மனைவி வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.