மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாநிலத்தில் ஆளும் திமுக கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை நடக்கிறது.
இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் விராலிமலை செக்போஸ்ட் அருகே மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் சோம.இளங்கோவன், அஞ்சுகம் பூபதி, இளம் சொற்பொழிவாளர் தமிழினியன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதில் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதாக துண்டறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சிறப்புரையாளர்கள் படங்களும் இடம்பெற்றுள்ளது. அதேபோல இதே நாளில் அமைச்சர் ரகுபதி மாவட்டச் செயலாளராக உள்ள புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மா.செ,அமைச்சர் ரகுபதி, பொன்னேரி சிவ, குடியாத்தம் புவியரசி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இந்த துண்டறிக்கையில் இதே அறந்தாங்கி நகரில் வசிக்கும் அமைச்சர் மெய்யநாதன் பெயரோ, படமோ இடம் பெறவில்லை. இதனால் அமைச்சர் மெய்யநாதன் ஆதரவாளர்கள் தொடர்ந்து இதேபோல தெற்கு மாவட்ட நிகழ்ச்சிகளில் எங்கள் அமைச்சரை புறக்கணித்து வருகின்றனர். சீனியரான மா.செவும், அமைச்சருமான ரகுபதி இதனை ஆமோதிக்கிறார். இதுவரை பொறுமையாக இருந்தோம் இனியும் பொறுமையாக இருக்க வேண்டியதில்லை. கட்சி தலைமைக்கு இந்து துண்டறிக்கைகளுடன் புகார் கொடுப்போம். கட்சித் தலைமை நல்ல முடிவெடுக்கட்டும் என்கின்றனர்.
மேலும் நாளை மறுநாள் புதுக்கோட்டை வரும் துணை முதல்வர் உதயநிதியிடம் இதுகுறித்து பஞ்சாயத்து கூட்ட ஆலங்குடி திமுகவினர் காத்திருக்கின்றனர்.